Thursday 19 January 2012

குமரியில் குளங்கள் தூர்வாருதல் குழு

குமரி மாவட்டத்தில் குளங்களை தூர்வாருதல் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசு டி.ஆர்.ஓ. தலைமையில் குளங்கள் தூர்வாருதல் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. இடம் பெற்றுள்ளார்.
குமரி மாவட்டத்தில் சுமார் 3000 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. குளங்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் மற்றும் பாசன சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட வில்லை. குளங்கள் தூர்வாருதல் என்பது, மண் வேலை சம்பந்தமானது என்பதால் இதற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. கனிம வளத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே குளங்களில் இருந்து மண் அகற்ற முடியும் எனவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஒரு சில இடங்களில் பொதுமக்களே ஆர்வமுடன் குளத்தை தூர்வார தொடங்கினால், மண் திருடுவதாக கனிம வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் கனிம வளத்துறையிடம் பாஸ் வாங்க வேண்டுமென்றால் பல மாதங்கள் அலைய வேண்டி இருந்தது. இதனால் குளங்கள் தூர்வாரப்படாமல் அப்படியே கிடந்தன.
எனவே குளங்கள் தூர்வார மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பாசன மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு நேரடியாக குளங்களை ஆய்வு செய்து தூர்வார அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கலெக்டராக இருந்த மதுமதியிடமும் இது தொடர்பாக மனு அளித்தனர்.
இதையடுத்து இப்போது மாவட்ட குழு அமைக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதன் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழு தலைவர் & மாவட்ட வருவாய் அலுவலர், உறுப்பினர்கள் & சார் ஆட்சியர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்), பேரூராட்சி உதவி இயக்குனர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர், கோட்டாட்சியர்கள், ஊராட்சி உதவி இயக்குனர் மற்றும் பதவி வழி தேர்வு செய்யப்படுகிறவர்களில் கோதையாறு நீர்பாசன திட்டக்குழு தலைவர் வின்ஸ் ஆன்றோ, பழையாறு பகிர்மான குழு தலைவர் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., தோவாளை சானல் பகிர்மான குழு தலைவர் அந்தோணி, பி.பி.சானல் பகிர்மான குழு தலைவர் முருகேச பிள்ளை, நாஞ்சில் நாடு , புத்தனாறு பகிர்மான குழு தலைவர் தாணுப்பிள்ளை, அனந்தனாறு பகிர்மான குழு தலைவர் பிரபாகர், பட்டணங்கால் திற்பரப்பு பகிர்மான குழு தலைவர் குணசீலன் உள்ளிட்டோரும் இக்குழுவில் இடம் பெறுகின்றனர்.
இது தொடர்பாக கோதையாறு பாசன திட்டக்குழு தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறுகையில், கனிம வளத்துறை பாஸ் கிடைக்காததால், பல குளங்கள் தூர்வாரப்படாமல் கிடந்தது. இப்போது தமிழக அரசு குளங்கள் தூர்வாருதல் குழு அமைக்க அனுமதி அளித்துள்ளதால், இனி குளங்கள் முறையாக தூர்வாரப்படும் என்றார்.

No comments:

Post a Comment