Saturday, 4 February 2012

சைதையில் கூடங்குளம் போராட்டக் குழு மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்கியதைக் கண்டித்து, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே இந்து முன்னணியினர் மற்றும் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன், கஞ்சிபுரம் மக்கள் மன்றம், மே 17 இயக்கத்தினர் உள்ளிட்டோர், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் பேசுகையில், “கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை நசுக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும், மக்களின் போராட்டத்தை மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது. பாழாய் போன பாமகவில் கடந்த 22 ஆண்டுகளாக இருந்தேன். தமிழனுக்காக இப்போது குரல் கொடுக்க வந்துள்ளேன்” என்றார்.
சீமான் பேசுகையில், "அணுகுண்டை கட்டிக்கிட்டு இருப்பதும், அணு உலைக்கு அருகே குடியிருப்பதும் ஒன்றுதான். பேச்சுவார்த்தை நடத்தப் போனவர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்கியிருக்கின்றனர். இது, ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரான செயல். மக்களின் வாழ்வாதரத்தைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. போராட்டம் நடத்துகிறவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்றால், அணு உலைக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும். திறந்தால் எங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போட வேண்டியிருக்கும்” என்றார்.
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால், சைதாப்பேட்டையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அணுமின்நிலையத்திற்கு எதிர்ப்பு கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்
கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (4ம்தேதி) கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவளம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment