Saturday 4 February 2012

கல்விக் கட்டணம் பிரச்னை முற்றுகிறது : மாநில அளவில் போராட்டம்

தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய கடந்த திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அது, தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்தது. இறுதியாக, கடந்த ஆண்டு மே மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் உரிய கட்டணம் முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன. கட்டணக் குழு உத்தரவிட்ட கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டது.
ஆனால், அதை தனியார் பள்ளி நிர்வாகங்கள் பொருட்படுத்தவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் பெற்றோர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கமிட்டியின் தலைவராக நீதிபதி சிங்காரவேலு பொறுப்பேற்றார். அதற்கு பிறகு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக 400 பள்ளிகள் மீது பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்த புகார்களின் மீது நீதிபதி சிங்காரவேலு, விசாரணை நடத்தினார். அதில் பல பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தது நிரூபணமானது. அதன் பேரில் அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கட்டண கமிட்டி பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரைகளை பெற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குநர், இதுவரை பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது, தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு வசதியாக போய்விட்டது. தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன.
இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் 200 பேருக்கு மேல், கட்டண கமிட்டியிடம் நேற்று புகார் தெரிவித்தனர். அதில் சென்னை, மதுரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன் கூறியதாவது:
தற்போது, இந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டு முடியும் நிலையில் உள்ளது. அதற்குள் எவ்வளவு கூடுதலாக கட்டணம் வசூலிக்க முடியுமோ, அவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் நிர்வாகிகள் குழந்தைகளை மிரட்டி வருகின்றனர். குழந்தைகளை தனிமைப்படுத்தி துன்புறுத்தி வருகின்றனர். இன்று 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் இங்கு வந்துள்ளனர். பள்ளிகளில் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து, கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் போராட்டம் நடத்தினோம், நீதிமன்றத்துக்கு சென்றோம், 40 முறைக்கு மேல் கட்டண கமிட்டியில் புகாரும் கொடுத்து விட்டோம். ஆனால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க எந்த பள்ளியும் தயாராக இல்லை. நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கட்டண கமிட்டி, அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தது. ஆனால் பள்ளிகள் கேட்கவில்லை. அரசின் உத்தரவை மதிக்காத பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். இந்த பிரச்னையில் அரசு நேரடியாக தலையிட வேண்டும். பெற்றோரை அலைய விட வேண்டாம்.
இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாநில அளவில் எல்லா பெற்றோரையும் ஒன்று திரட்டி உண்ணாவிரதம் இருப்போம்.
இவ்வாறு அருமைநாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment