Monday 12 December 2011

குமரியில் பிரமாண்ட குடில்கள் அமைக்கும் பணி தீவிரம் : கருங்கலில் ரூ.10 லட்சம், பாலபள்ளத்தில் ரூ.7 லட்சம்

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிற கிறிஸ்துமஸ் விழாவானது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் 25&ந் தேதி கொண்டாடப்படும் இந்த விழாவை உலகின் அனைத்து பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். குமரி மாவட்டத்தில் இந்த விழாவை வரவேற்கும் விதமாக 1 மாதத்திற்கு முன்பே வீடுகளில் மின்விளக்குகள், மற்றும் ஸ்டார்கள் கட்டி தொங்கவிட்டு விழாவை சிறப்பிப்பது நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பர் 1 ம் தேதி முதல் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பாடல் ஊர்வலங்கள் போன்றவை நடக்கின்றன. மேலும் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து அதில் வண்ண மின்விளக்குகள் அலங்கரித்து பொதுமக்கள் பார்வைக்கு விடுவதும் வழக்கமாக உள்ளது. இந்த வகையில் ஆண்டுதோறும் குமரியில் கருங்கல் மற்றும் பாலபள்ளம் போன்ற பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்படும். இந்த வருடம் கருங்கல் பகுதி இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் மிக பிரமாண்டமான குடில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
குடில் அமைப்பு வல்லுனர்கள் ஜஸ்டின், மெர்ஜின் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த குடிலானது ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா அரண்மனை வடிவில் உருவாக்கப்படுகிறது. குடில் உள்ளே பைபிள் நிகழ்வுகள், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வரலாறு போன்றவை கண்களை கூசச்செய்யும் மின்விளக்கு அலங்காரங்களுடன் சித்தரிக்கப்படுகிறது. 100 அடி நீளம், 65 அடி உயரத்தில் இந்த குடில் பிரமாண்டமாக உருவாக்கப்படுவதாக இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெரால்டு, செயலாளர் சந்தோஷ், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுபோன்று பாலபள்ளம் வின்ஸ் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் பிரமாண்ட குடில் உருவாக்கப்படுகிறது. 110 அடி நீளம், 55 அடி உயரத்தில் உருவாகும் இந்த குடில் சீனாவில் போதி தர்மர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஹாராவெய்க் என்ற அரண்மனையின் மாதிரியில் உருவாக்கப்படுகிறது. இதுபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளான மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், புதுக்கடை, முஞ்சிறை உள்பட பல்வேறு பகுதிகளிலும் புல் குடில்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த குடில்கள் அனைத்தும் 23 ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படுகின்றன. இவற்றை பார்வையிட குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பேர் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது கருங்கல், பாலபள்ளத்தில் நடை பெரும் நிகழ்வு அல்ல... குமரி மாவட்டம் முழுவதும் மக்கள் போட்டிபோட்டு கொண்டு செய்ய கூடியது. மக்கள் திரளாக, குடும்பங்களுடன் வந்து கண்டு மகிழ்வார்கள். நல்ல ஒரு நிகழ்வு. 
உண்மையில் நாம் இவற்றை எதற்காக அமைக்கிறோம்????
கிறிஸ்துமஸ் என்பது நம்பில் யார் பெரியவன் என காட்டி / போட்டி போட்டு கொள்வதற்காகவா???
ஒற்றுமையும், பிறரை மதித்து, பகிர்ந்து, சகோதர உணர்வுடன் இறைவனின் வருகையை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடுவோம்.  சண்டைகளை தவிப்போம்... ஒற்றுமையுடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment