400ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பூலாம்பட்டியில் பாழடைந்த தண்ணீரில்லாத கிணற்றில் ஓலைச்சுவடிகள் கிடந்தன. தொல்லியல் ஆர்வலர் நந்திவர்மன் இதனை கண்டுபிடித்து எடுத்துள்ளார். இந்த ஓலைச்சுவடிகள் 400 ஆண்டுகளுக்கு முந்தையவை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து நந்திவர்மன் கூறுகையில், `இதில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, மூதுரை, விநாயகர் அகவல், பழநி முருகன் காவடி சிந்து, பெரியநாயகி அம்மன் துதி, ராமாயண உரைநடை, மருத்துவச்சுவடிகள், திருமண மொய் கணக்கு, திருமண அழைப்பு, வரவு&செலவு ஓலைச்சுவடிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. இவற்றில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவை நகல்களுக்காக எழுதப்பட்டவை என கருதுகிறேன். சிலவற்றில் இதுவரை அச்சில் வராத தெய்வப் பாடல்கள் தூய தமிழில் உள்ளன.
திருமண சுவடியில் மணமக்களின் பெயர் மற்றும் மொய் அளித்தவர்களின் விபரங்கள் உள்ளன. வரவு & செலவு சுவடியில் வட்டிக்கு பணம் கொடுத்த விபரம், அதற்கு ஈடாக பெற்ற பொருட்களின் விபரங்கள் உள்ளன. ஓலைச்சுவடிகள் 40 செமீ நீளம், 3 செமீ அகலத்தில் உள்ளன. வடமொழி சொற்கள் ஆங்காங்கே அரிதாக உள்ளன. இந்த சுவடிகள் அருங்காட்சியக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்’ என்றார்.
No comments:
Post a Comment