இன்ஜினியரிங் கல்லூரி ஊழியர் கைது : கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் கொடூரம்
அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் செல்வராஜ்குமார்(36). டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கும் திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த இசக்கிமுத்து மகள் அனிதா(33) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயது மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன.
செல்வராஜ்குமார் செண்பகராமன்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் லேப் அசிஸ்டென்டாக வேலை பார்த்து வருகிறார். பிஎஸ்சி பட்டதாரியான அனிதா வீட்டில் டியூஷன் நடத்தி வந்தார். செல்வராஜ்குமாருக்கு மனைவி மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இரவில் யாரோ அடிக்கடி ஜன்னல் கதவை தட்டியதாக கூறி ஜன்னல் கதவுகளில் மின்சார ஷாக் கொடுத்து வைத்திருந்தார். ஏற்கனவே ஒருமுறை மனைவி மீது சந்தேகம் அதிகரித்ததால் அவருடன் தகராறு செய்து தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மனைவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் செல்வராஜ் மும்பை சென்றார். நேற்று முன்தினம் ஊர் திரும்பினார். அப்போது ஊரில் சிலரிடம் மனைவி தன்னை பைத்தியம் எனக் கூறுவதாகவும், அதற்காக மின்சார ஷாக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பின், வீட்டில் தனியே இருந்த மனைவியிடம் தகராறு செய்தார். திடீரென, எனக்கு மின்சார ஷாக் வைக்க திட்டமிட்டுள்ளாயா? எனக் கூறி மனைவியின் கை மற்றும் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அனிதாவின் அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அனிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதைப் பார்த்த செல்வராஜ்குமார் மீண்டும் பொதுமக்கள் முன்னிலையில் அனிதாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று செல்வராஜ்குமாரை கைது செய்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் அஞ்சுகிராமம் எஸ்ஐ முத்துராஜ் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் செல்வராஜ்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு ஊர்திரும்பிய அவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தனியார் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment