‘மர்ம குரல்’ கூறியதாக வாக்குமூலம் : மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு
அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண், கைக்குழந்தையை ஆற்றில் வீசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிப்பவர் தேவி சில்வியா. வயது 34. இவருடைய கணவர் டோமினிக் பிருத்விராஜ். இவர்களுக்கு மூத்த மகள் ஒருத்தியும், ஜெசிகா என்ற 21 மாத பெண் குழந்தையும் உள்ளனர். தமிழகத்தில் கணக்கு ஆசிரியையாக பணியாற்றியவர் சில்வியா. கணவர் அமெரிக்காவில் வேலை செய்வதால் இங்கு குடியேறினார்.
நியூயார்க் நகரில் ஓடும் ஹட்சன் ஆற்றுக்கு கடந்த ஆண்டு மே மாதம் குழந்தையுடன் சில்வியா சென்றார். அங்கு திடீரென தனது கைக்குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலை முயன்றார். தகவல் அறிந்து மீட்டு படையினர் விரைந்து சென்றனர். அதற்குள் ஆற்றின் நடுப்பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
மீட்புப் படையினர் விரைந்து சென்று குழந்தையையும் சில்வியாவையும் மீட்டனர். சிகிச்சைக்கு பின் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்து கொண்டனர். இதையடுத்து சில்வியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது சில்வியா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ‘‘சில்வியா குற்றமற்றவர். அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளது. பைபோலார் என்ற மனநிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்’’ என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்த போது, ‘குழந்தையை ஆற்றில் வீசினீர்களா?’ என்று நீதிபதி கேட்டார். அதற்கு, ‘ஆமாம், ஆனால், என்ன செய்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. யாரோ என்னிடம் பேசும் குரல் கேட்கிறது. குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு என்னையும் குதிக்க சொன்னார்கள். அதன்படி செய்தேன். என்ன செய்தேன் என்பது தெரியவில்லை’ என்று சில்வியா பதில் அளித்தார்.
இதையடுத்து சில்வியாவுக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில்வியா தற்போது ஜாமீனில் உள்ளார். இவருடைய 2 குழந்தைகளையும் உறவினர்கள் இந்தியாவுக்கு அழைத்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment