Tuesday 13 December 2011

வேலை நேரம் அதிகரிப்பு??? : ஜனவரி 2ம் தேதி முதல் அமலாகிறது அரசு பள்ளிகளில்

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை வரும் ஜனவரி 2ம் தேதி முதல் அரை மணி நேரம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தியது. இதை அதிமுக அரசு, இக்கல்வித்திட்டத்தை ஆரம்பத்திலேயே முடக்க முயன்றது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து இந்த கல்வித்திட்டத்தை அதிமுக அரசு ஏற்றுக்கொண்டது. இதனால், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகே பள்ளிகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. இது தவிர, உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தியதால் பள்ளிகளில் பாடங்களை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் ஜனவரி 2 முதல் ஏப்ரல் 30 வரை அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தையும் அரை மணி நேரம் அதிகரித்து, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலை 9.30 மணிக்கு முதல் பாடவேளை தொடங்குகிறது. மதியம் 12.40 முதல் 2 மணி வரை உணவு இடைவேளை விடப்படுகிறது. பிறகு மாலை 4.10 மணி வரை வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. காலை 11 மணி முதல் 11.10 வரையிலும், மாலையில் 3.20 முதல் 3.30 வரையிலும் குழந்தைகளுக்கு இடைவேளை விடப்படுகிறது. புதிய உத்தரவுப்படி, இனி அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மாலை 4.40 மணி வரை செயல்படும். இந்த உத்தரவுக்கு ஆசிரியர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது.
இதுகுறித்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பள்ளிகளின் வேலை நாள் குறைந்ததால் ஏற்கனவே பணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாதத்தில் 2 சனிக்கிழமைகள் பணி நாட்களாக மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளி வேலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து விடுவர். அரை மணி நேரம் கூடுதலாக வகுப்புகளை செயல்படுத்துவதை காட்டிலும், மதிய உணவு இடைவேளை நேரத்தைக் குறைத்தாலே போதும்’’ என்றனர்.

No comments:

Post a Comment