Tuesday, 13 December 2011

42 பேரின் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு : டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரொலி :

ஓய்வு பெற்ற அதிகாரிகள் கலக்கம் : முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு அரசு துறை பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்மூலம் நடத்தப்படும் கால்நடை இன்ஸ்பெக்டர், பல் மருத்துவர் மற்றும் குரூப் 1 உள்ளிட்ட பல தேர்வுகளில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, டிஎன்பிசி முன்னாள் சேர்மன் செல்லமுத்து மற்றும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மற்றும் 14 பேரின் வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது பல லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 8 பேர் வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். ஒரே நேரத்தில் பல இடங்களில் ரெய்டு நடந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் எஸ்பியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் மணி. இவர், டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்தார். சென்னை வேளச்சேரி சீதாபதி நகரில் உள்ள இவரது வீட்டில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை போட்டனர். அப்போது பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள முருகானந்தம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றியவர்.
சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றுபவர் செந்தில்குமார். காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் உள்ள இவரது வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி விஜயராகவன் தலைமையில் இன்று காலை சோதனை நடத்தினர். ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக இருப்பவர் சங்கரன். வானவில் நகரில் உள்ள இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
பிரபல தொழில் அதிபர்கள், புரோக்கர்களின் வீடுகள் என சென்னையில் 14 இடங்களில் ரெய்டு நடத்தினர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் போலீஸ் உட்கோட்ட டிஎஸ்பி அன்பு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையிலான குழுவினர் இன்று காலை சோதனை தொடங்கினர். டிஎஸ்பி அன்பு விடுமுறையில் இருப்பதால் ஆம்பூர் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டையில் டிஎஸ்பி ஒருவரின் வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
முன்னாள் எம்எல்ஏவீட்டிலும் சோதனை :
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாதையன். அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார். இவரது வீடு, ஈரோடு மூலப்பாளையம் விவேகானந்தர் தெருவில் உள்ளது. இங்கு ஈரோடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி முருகேசன் தலைமையில் போலீசார் இன்று காலை 7 மணிக்கு சோதனை நடத்தினர். மாதையனுக்கும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சென்னையில் மட்டும் 14 இடங்களில் இன்று ரெய்டு நடந்தது. தவிர மதுரையில் 7, சேலம் 5, சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 2, தேனி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்தில் ரெய்டு நடந்தது.

No comments:

Post a Comment