Thursday 15 December 2011

உரிமையை விட்டுத்தர மாட்டோம் : முல்லை பெரியாறு அணை விவகாரம்

சட்டசபையில் ஜெ. கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை கூடியது. முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்காலத்தில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வேண்டும். அதற்காக அணையை பலப்படுத்துவதற்கு கேரளா தடையாக இருக்கக் கூடாது என்று தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழக தொழிலாளர்கள், அவர்களது வாகனங்கள் மீது தாக்குதல் நடந்தது. அதற்கு பதிலடியாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. இதற்கிடையே, கேரள சட்டசபையில் கடந்த 9&ம் தேதி முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் போராட்டம் வலுத்தது. தேனி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
கேரளாவை போல தமிழக அரசும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, முல்லை பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று, தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 15&ம் தேதி நடக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, தமிழக சட்டசபையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 10 மணியில் இருந்தே அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்த வண்ணம் இருந்தனர். முதல்வர் ஜெயலலிதா, 10.55க்கு சபைக்குள் வந்தார். அதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள், மு.க.ஸ்டாலின் தலைமையில் வந்தனர். முதல்வருக்கு ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு முதல்வரும் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தேமுதிக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்தனர். பின்னர் விஜயகாந்தும் அவைக்கு வந்தார்.
சரியாக 11 மணிக்கு அவை தொடங்கியது. சபாநாயகர் ஜெயக்குமார், திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 9 பேருக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் வாசித்தார். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் சொ.கருப்பசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் படித்தார். முதல்வர் உள்பட அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 15 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 11.20 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அவை முன்னவரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பேரவை விதி 35-ஐ தளர்த்தி, அரசு அலுவல்களை இன்று எடுத்துக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் நிலை குறித்த சிறப்பு தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். ‘முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் வகையில், நீர்ப்பாசன சட்டத்தில் கேரள அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு தடையாக இருக்கக் கூடாது’ என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து பேசினர். முடிவில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment