Thursday, 15 December 2011

பஞ்சாப் விநோதம் : மைனஸ் மதிப்பெண் பெற்ற மாணவர் வெற்றி

பஞ்சாப் நீதித்துறைக்கு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் மைனஸ் 10 மதிப்பெண்கள் பெற்ற பழங்குடியின மாணவர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநில நீதித்துறையில் காலியாக உள்ள துணை நீதித்துறை அதிகாரி பதவிக்காக, பஞ்சாப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது.
இந்த தேர்தல் முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள பிரதான தேர்வை எழுத, கட் & ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டவர், விளையாட்டு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என 13 பிரிவுகளின் கீழ் 979 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவுக்கான கட்&ஆஃப் மதிப்பெண், அதிகபட்சமாக 315 எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பழங்குடியினருக்கான பிரிவில் 6 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் மஞ்ஜிந்தர் கவுர் என்பவர் அதிகபட்சமாக 285 கட்&ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆனால், தஜிந்தர் சிங் என்ற மாணவர், முதல்நிலை தேர்தவில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி, மைனஸ் 10 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். இவர், 23 கேள்விகளுக்கு சரியான பதிலும், 102 கேள்விகளுக்கு தவறான பதிலும் எழுதியுள்ளார்.
இருப்பினும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராக மட்டுமின்றி, முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்ற சிறப்பு பிரிவின் கீழும் இவர் ஒருவர் மட்டுமே வருகிறார். எனவே, வேறுவழியின்றி பிரதான தேர்வுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது யாரும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment