Wednesday 14 December 2011

10 ஆயிரம் பெண்கள் மறியல் : 10&வது நாளாக இன்றும் படையெடுப்பு லாரி, வேன்களில் அணிவகுப்பு

கேரள அரசை கண்டித்து 10&வது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்லை நோக்கி திரண்டனர். எல்லையில் 10 ஆயிரம் பெண்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் குமுளி, கம்பம்மெட்டு உள்ளிட்ட கேரள & தமிழக எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள எல்லைக்குள் நுழைந்து விடாமல் இருக்க போலீசார் கடந்த இரு நாட்களாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து வருகின்றனர்.
தேனி நகர் பகுதியிலும் நேற்று போராட்டம் வெடித்தது. கேரள பிரமுகருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் சூறையாடப்பட்டது. 10-வது நாளாக இன்றும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. மதுரையில் இருந்து தேனிக்கு ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தேனியில் இருந்து கம்பம், கூடலூர் பகுதிக்கு பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 20-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கம்பத்தில் உழவர்சந்தை அடைக்கப்பட்டு, வியாபாரிகள் பேரணியாக சென் றனர்.
உத்தமபாளையம் அருகே கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், சின்னஓபுலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இன்று காலை கேரள மாநிலம் குமுளி நோக்கி புறப்பட்டனர். 500&க்கும் அதிகமான பைக்குகள், மினிலாரிகளில் அணிவகுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பத்தில் அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூரில் 10 ஆயிரம் பெண்கள் இன்று காலை திரண்டு ஊர்வலமாக வந்தனர். லோயர்கேம்ப் செல்ல முயன்ற அவர் களை போலீசார் தடுத்தனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார், பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
இதற்கிடையே தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. மயிலாடும்பாறை அருகே உள்ள தழையூத்து கிராமத்தில் கேரள பிரமுகருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இன்று காலை எஸ்டேட்டுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். அங்கு பதற்றம் இன்னும் தணியவில்லை.
வெற்றி நம் பக்கம்தான்’ வீதி வீதியாக தண்டோரா
பெரியாறு அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்ககோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து போராட்டங்களின் தீவிரத்தை குறைக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பற்றி தண்டோரா மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. கலெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில், தேனி மாவட்டம் முழுவதும் இன்று காலை தண்டோரா செய்யப்பட்டது.
‘அணை விவகாரத்தில் கேரள அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து வருகின்றன. வெற்றி நம் பக்கம்தான். இதனால் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். 999 ஆண்டு உரிமை நிச்சயமாக மீட்டெடுக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது.
பதற்றம் அதிகமாக உள்ள தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் பகுதிகளிலும் போலீசார் மைக்கில் இதை அறிவித்தபடி சென்றனர்.
சாப்பாட்டுக்கு தவிக்கும் போலீசார்
கடந்த ஒரு வாரமாக கூடலு£ர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் தொடர் கடையடைப்பு, போக்குவரத்து முடக்கம் காரணமாக அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மறியல், உருவ பொம்மை எரிப்பு, ஊர்வலம் என்று பல பிரச்னைகளை அவர்கள் சமாளிக்க வேண்டி உள்ளது. இதற்கிடையே, சரியான சாப்பாடு கிடைக்காமல் போலீசார் சோர்ந்து போகின்றனர். பலர் பழம், பிரட் என கிடைத்ததை உண்டு பசியாறி வருகின்றனர்.

No comments:

Post a Comment