Wednesday, 14 December 2011

முல்லைப் பெரியாறு : சுற்றுலா பயணிகள் குறைந்ததால் வெறிச்சோடும் தேக்கடி, மூணாறு

முல்லைப் பெரியாறு பிரச்னையால் பதற்றம் நிலவுவதால், கேரளாவின் புகழ் பெற்ற தேக்கடி, மூணாறில் சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவுகிறது. கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக கம்பம், கூடலூர், குமுளி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், இந்த வழியாக கேரளாவுக்குள் கடந்த 2 வாரங்களாக எந்த போக்குவரத்தும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து குமுளி சோதனைச் சாவடி வழியாக சரக்குகள் எதுவும் செல்லாததால், கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.
சுற்றுலா செல்பவர்கள், சபரிமலை செல்பவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால், கேரளாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கேரளாவின் முக்கிய வருமானங்களில் சுற்றுலா வருமானம் குறிப்பிடத்தக்கது. இடுக்கி மாவட்டத்தில்தான் சர்வதேச சுற்றுலாத் தலங்களான தேக்கடி, மூணாறு ஆகியவை அமைந்துள்ளன. இந்த இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த இடங்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில்தான் அதிகளவில் பயணிகள் வருவார்கள்.
வனத்துறையின் அதிகாரபூர்வ கணக்கின்படி கடந்த 2010, நவம்பரில் 62,148 உள்ளூர் பயணிகளும், 4,600 வெளிநாட்டினரும் தேக்கடி வந்துள்ளனர். இதே ஆண்டு, டிசம்பரில் 70,468 உள்ளூர் பயணிகளும், 4238 வெளிநாட்டினரும் வந்துள்ளனர். இந்த ஆண்டு கடந்த நவம்பரில் 52,298 உள்ளூர் பயணிகளும், 3,736 வெளிநாட்டினரும் வந்துள்ளனர்.
உச்சக்கட்ட சீசன் நேரமான இந்த டிசம்பர் மாதத்தில் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக தேக்கடி, மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. ஓட்டல்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மூணாறில் உள்ள பல ஸ்டார் ஓட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெரும்பாலான அறைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தேக்கடி, மூணாறில் சுற்றுலா பயணிகள் குறைந்து வருவதால் கேரள சுற்றுலாத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
படகு சவாரிக்கு ஆளில்லை
தேக்கடியில் படகில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால், சில தினங்களாக பயணிகள் இன்றி படகு குழாம் வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன் தேக்கடியில் நடந்த படகு விபத்தில் 45 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால், ஓராண்டுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலுமாக குறைந்து இருந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் சகஜநிலை திரும்பி, பயணிகள் வருகை அதிகமானது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது, முல்லைப் பெரியாறு விவகாரத்தால் தேக்கடியில் சுற்றுலாவை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment