Wednesday 14 December 2011

பத்திரங்கள் பதிவு செய்வதற்கு பொதுமக்களே ஆவணங்கள் எழுதலாம்

இணையதளத்தில் படிவங்கள் 
தாங்களாகவே ஆவணங்களை எழுதி தாக்கல் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரி படிவங்கள் இணைய தளத்தில் உள்ளது என கலெக்டர் மதுமதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பத்திரப்பதிவு செய்வதற்கான ஆவணங்கள், ஆவண எழுத்தர்கள் மூலமாக எழுதப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பொதுமக்கள் தாமாகவே ஆவணங்கள் தயாரிக்க உதவிடும் வகையில் எளிய மாதிரி படிவங்கள் பத்திரப்பதிவுத்துறை மூலமாக வடிவமைக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி படிவங்களை பதிவுத்துறை இணையதளத்தில் www.tnreginet.net பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகங்களில் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மாதிரி ஆவணங்களை பயன்படுத்தி ஆவணதாரர்களே ஆவணம் எழுதி தாக்கல் செய்ய ஏதுவாக தாங்கள் பதிவு செய்ய வேண்டிய பொருள் குறித்த விவரங்களை இணையதளத்திலோ, அலுவலகத்திலோ தெரிந்து கொள்ளலாம். பதிவு செய்ய வேண்டிய ஆவணத்தின் மதிப்பிற்கு ஏற்ப பத்திரங்கள் வாங்கி பிழைகள் இல்லாமல் தயார் செய்து பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் திருமணங்கள் பதிவு செய்யவும், வில்லங்கச் சான்று நகல் மனு பெறவும் தேவையான விண்ணப்பப் படிவங்களும் பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாதிரி படிவங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவுகள் செய்து பயனடையலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment