கூடங்குளம் அணுமின்நிலையத்திற்குள் செல்லும் அதிகாரிகளிடம் போராட்டக்குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை அவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடங்குளம் அணுமின்நிலைய பணிக்கு செல்பவர்களை கண்காணிக்க வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போராட்டக்குழுவினர் ஆய்வு செய்ய அனுமதியளிக்கப்பட்டது. வரும் 15ம் தேதிக்குள் அங்கு பணிபுரியும் அனைத்து ஒப்பந்த பணியாளர்களும் வெளியேற வேண்டும். அன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மத்திய, மாநிலக்குழுக்களுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் எவை அத்தியாவசியப்பணிகள் என்பது வரையறுக்கப்பட வேண்டும் என்ற கோ ரிக்கைகள் ஏற்கப்பட்டன.
நேற்று முதல் அணுமின்நிலைய ஊழியர்கள் செல்லும் பஸ்கள் முதல் அதிகாரிகள் செல்லும் கார்கள் வரை வழிமறித்து விஏஓ, வருவாய் ஆய்வாளர் மற்றும் போராட்டக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சோதனையிட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளை போராட்டக் குழுவினர் அடையாள அட்டையை காட்டக்கூறி கேட்டனர். அணுமின்நிலையத்திற்குள் அந்நியர்கள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பில் ஈடுபடும் எங்களை எந்த அதிகாரமும் இல்லாதவர்கள் சோதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று மனம் குமுறுகின்றனர்.
கூடங்குளத்தில் தற்போது செய்யப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் விவரம் குறித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் ராஜகிருபாகரன்கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
16, 17, 18 ஆகிய தேதிகளில் கூடங்குளத்தில் கடையடைப்பு
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நிம்மதியான பணிச்சூழல் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் வரும் கல்வியாண்டில் சென்னை கல்பாக்கத்திலோ அல்லது இந்தியாவில் உள்ள வேறு அணுமின்நிலையங்களிலோ மாறுதல் பணி கேட்க தொடங்கி விட்டனர். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் கூடுதல் அணுஉலைகளை நிறுவுவதற்காக 3 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் 16ம் தேதி ரஷ்யா செல்கிறார். இதையடுத்து 16, 17, 18 ஆகிய தேதிகளில் கூடங்குளத்தில் கடையடைப்பு நடத்தவும், கடலோர கிராமங்களில் மீன்பிடிக்க செல்லாமல் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment