மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயின் மாநகராட்சியில் பியூன் ஒருவரின் வீட்டில் லோக் அயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான பணம், நகைகள் மற்றும் ரூ 12 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின.
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயின் மாநகராட்சியில் தற்போது ஸ்டோர் கீப்பராக பணியாற்றுபவர் நரேந்திர தேஷ்முக். கடந்த 1978ல் பியூனாக மாதம் ரூ 150 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்த இவர், இத்தனை ஆண்டுகளில் சம்பளமாக அதிகபட்சமாக ரூ 15 லட்சம்தான் வாங்கியிருப்பார். ஆனால், இவர் மிக ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். மாநகராட்சியில் நடந்த பல ஊழல்களில் அதிகாரிகளுடன் இவருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இவரை சஸ்பெண்ட் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, லோக் அயுக்தா போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரது பங்களாவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரொக்க பணம், தங்க நகைகள், எல்சிடி டி.வி.கள், 6 லேப்டாப், 10 செல்போன் மற்றும் ரூ 10 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள், ரூ 13 லட்சம் வங்கி டெபாசிட் சிக்கின. இதை பார்த்து போலீசாரே திகைப்படைந்தனர். பல வங்கிகளில் லாக்கர்கள் வைத்திருப்பதையும் கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் இன்று திறந்து சோதனை நடத்தவுள்ளனர்.
தேஷ்முக் சிக்கியதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய ஊழல் அதிகாரிகள் பலரும் மாட்டலாம் என தெரிகிறது. இதனால், உஜ்ஜயின் மாநகராட்சி அதிகாரிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
பக்கத்து வீட்டில் பண மழை
தேஷ்முக் பங்களாவில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்திய போது, பங்களாவில் இருந்தவர்கள் மாடிக்கு ஓடியிருக்கின்றனர். உடனே, போலீசாரும் வேகமாக பின்தொடர்ந்தனர். அப்போது அங்கிருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் அவர்களை பயமுறுத்தியது. ஒரு வழியாக போலீசார் மாடிக்கு சென்ற போது, நகைகள் மற்றும் பணத்தை பக்கத்து வீடுகளின் மாடிகளில் வீசியதை கண்டுபிடித்தனர். பின்னர், அவற்றை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment