கல்விக்கு முதல் மரியாதை
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். கல்வியின் முக்கியத்துவத்தை இதன்மூலம் அறியலாம். அழியாத செல்வமான கல்வியை கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும் என்பதால் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போதைய சூழலில் கல்வி வியாபாரமாகி வருவது ஒரு புறம் இருந்தாலும் அரசு பள்ளிகளில் கல்வி இலவசம்தான். இருந்தாலும் பொருளாதார சூழல் காரணமாக குழந்தைகளின் கல்விக்கு தடை ஏற்படுகிறது.
சிதம்பரம் பைபாஸ் சாலை அருகே மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ள செம்மறி ஆடுகள்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நடுவங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், இவரது மனைவி ராமு. ஊரில் சரியான வேலை கிடைக்காததால் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை ஊர் ஊராகச்சென்று மேய்த்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.
தற்காலிக குடிசை அமைத்து தங்கியிருக்கும் கிருஷ்ணன், ராமு தம்பதியர்.
பல வருங்களுக்கு முன் ஊரை விட்டு குடும்பத்துடன் புறப்பட்ட இவர்கள் தற்போது சிதம்பரம் பைபாஸ் சாலை அருகே குடிசை அமைத்து செம்மறி ஆடுகளை மேய்த்து வருகின்றனர். ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டும் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். வறட்சி காரணமாக இவர்கள் ஊரை விட்டு வெளியேறி நாடோடியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுமார் 300 செம்மறி ஆடுகள் உள்ளன். வளர்ந்த பெரிய ஆட்டை மட்டுமே இவர்கள் விற்பனை செய்கின்றனர். ரூ 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்தப்பணத்தில் கொஞ்சம் இவர்கள் வைத்துக் கொண்டு மீதியை ஊரில் தாத்தா பராமரிப்பில் இருந்தபடியே பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குமராட்சி, புவனகிரி, காரைக்கால், நாகூர், கடலூர், சீர்காழி, திருவண்ணாமலை, நகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதியிலேயே இவர்கள் ஆடு மேய்த்து வருகின்றனர். வயதான தாய், தந்தை மட்டுமே சொந்த கிராமத்தில் உள்ளனர். இவர்களை போலவே இவர்களின் ஊரை சேர்ந்த பலரும் ஆடு மேய்த்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
ராமு கூறுகையில், வறட்சி மற்றும் விவசாயம் செய்ய முடியாததால் பிழைப்பு நடத்துவதற்காக நாங்கள் ஊர்விட்டு ஊர்வந்து ஆடு மேய்து வருகிறோம். தலைமுறை, தலைமுறையாக இது நடந்து வருகிறது. நாங்கள் தான் படிக்கவில்லை எங்கள் பிள்ளைகளாவது நல்லமுறையில் படித்து பெரியவேலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில் தான் மழை, வெயில் என்று பாராமல் ஆடுமேய்த்து வருகிறோம். காடு, மேடு என்று பாராமல் படுத்து தூங்குகிறோம், எல்லாம் எங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக என்று பெருமிதத்துடன் கூறினார். குழந்தைகளை வேலைக்கு அனுப்பி அந்த பணத்தில் குடும்பம் நடத்தும் பெற்றோர் மத்தியில் குழந்தைகளின் படிப்புக்காக ஊர் ஊராகச்சென்று ஆடுமேய்த்து வரும் கிருஷ்ணன்&ராமு தம்பதியர் வித்தியாசமானவர்கள்தான். (Tamil Murasu)
No comments:
Post a Comment