மெக் டொனால்டு நிறுவனத்தின் ‘ஹேப்பி மீல்’ உணவு பொருள்கள் குழந்தைகளின் உடல்நலனை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி அந்நிறுவனத்துக்கு பிரேசில் கோர்ட் ரூ.9.18 கோடி அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கிளைகள் வைத்து உணவு பொருள் விற்பனை செய்து வரும் நிறுவனம் மெக் டொனால்டு. அமெரிக்காவில் 60 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த நிறுவனம். இந்நிறுவனம் ‘ஹேப்பி மீல்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு பொருள்களை 1979&ல் அறிமுகப்படுத்தியது. இது கிப்ட் பாக்ஸ் போல இருக்கும். ஹம்பர்கர், சீஸ் பர்கர், சிக்கன் மெக் நகட்ஸ், சாஸ், குளிர்பானம் ஆகியவை மட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை ஒன்றும் அதில் இருக்கும். உலகின் பல நாடுகளிலும் இதை மெக் டொனால்டு விற்பனை செய்து வருகிறது. உணவுகள்கூட சில நேரம் பொம்மை வடிவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்நிலையில், ஹேப்பி மீல் உணவுகள் குழந்தைகளின் உடல்நலனை கெடுப்பதாக பிரேசிலில் புகார் எழுந்தது. தொடர்ச்சியாக ஹேப்பி மீல் சாப்பிடுவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வீட்டு உணவுகளில் இருந்து அவர்களை அகற்றி, அடிமையாக்குகிறது என்று புகாரில் கூறப்பட்டது.
இதையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சாபாலோ கோர்ட், மெக்டொனால்டு நிறுவனத்துக்கு ரூ.9.18 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
No comments:
Post a Comment