Monday 19 December 2011

ரூ 100 கோடியில் சுற்றுலா பூங்கா : சென்னை, திருச்சியில் சிங்கப்பூர் போல

சிங்கப்பூரில் உள்ளது போல சென்னை, திருச்சியில் ரூ 100 கோடி செலவில் சென்டோசா பூங்கா அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மேலும் புதிய சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சுற்றுலாத்துறைக்கு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலுக்கும், சுற்றுலாத் தலங்களை சந்தைப்படுத்துதலுக்கும் ஒரு புதிய ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூரிலுள்ள சென்டோசா பூங்காவைப் போன்று இரண்டு பூங்காக்கள், ஒன்று சென்னையிலும் மற்றொன்று திருச்சியிலும் தலா ரூ 50 கோடியில் அமைக்கப்படும். கைவினைப் பொருட்கள், பராம்பரியக் கலைகளை தன்னகத்தே கொண்ட கிராமங் கள் சுற்றுலா தொகுப்பு கிராமமாக உருவாக்கப் படும்.
அதன்படி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையார்பட்டி, கானாடுகாத்தான், ஆத்தங்கடி ஆகிய செட்டிநாட்டு பகுதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், சுவாமிமலை, தாராசுரம், பட்டீஸ்வரம், நாச்சியார் கோவில் பகுதிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், திற்பரப்பு, திருவட்டார், உதயகிரி, தேங்காய்பட்டினம் பகுதிகள், மதுரை மாவட்டம், அழகர்கோவில், பழமுதிர்சோலை, மேலூர், நரசிங்கம்பட்டி பகுதிகள், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகள், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகிய பகுதிகள் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்படும்.
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய சுற்றுலா சுற்றுகள் உருவாக்கப்படும். கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று (ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்று), தென்னக சுற்றுலாச் சுற்று (ஆன்மிகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று). காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவை உருவாக்கப்படும்.
அவற்றை ரூ 450 கோடி செலவில் 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்கட்டமாக, கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி திறன் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ், 28 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 3,500 இளைஞர்களுக்கு, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பிலும், உணவு வழங்கும் சேவைப் பிரிவிலும், பயிற்சி அளிக்கப்படும். 500 இளைஞர்களுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சியும் வழங்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களை யும் இணைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 25 இடங்களில் சாலையோர சுற்றுலா வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நவீன முறையில் ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு கப்பல்கள் மூலம் தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் மலை வாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்க அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரோப் கார் திட் டம் செயல்படுத்தப்படும்.

No comments:

Post a Comment