ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா சட்டசபை தொகுதிக்கு கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கோர்ட் உத்தரவுப்படி இன்று மீண்டும் எண்ணப்பட்டன.
ஜார்கண்ட் சட்டசபைக்கு கடந்த 2009ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது. ஹட்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சரன்நாத் ஷாதியோ வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ராம்ஜிலால் ஷார்தாவை விட 25 வாக்குகளே கூடுதலாக பெற்றார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தை காட்டி மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடுமாறு ராம்ஜிலால் தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தார். இதனை ஆணையம் நிராகரித்து விட்டது.
ராம்ஜிலால் ராஞ்சி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது. இதை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதற்காக ராஞ்சி பழைய சிறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள், பந்தரா பஜார் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம் 16 சுற்றுகளாக வாக்கு எண்ணப் பட்டது.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள் டிவி திரையில் காண்பிக்கப்பட்டது. வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். யார் வெற்றி பெற்றார் என்பதை கோர்ட் முடிவு செய்யும்.
இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் சரன் நாத் ஷாதியோ கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவர் வெற்றி பெற்றதாக ஐகோர்ட் அறிவித்தால் இங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment