வயது வாரியாக நான்கு விதங்களில் நடக்கிறது. : கடும் தண்டனை இல்லை
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு விடுமுறை நாள் என்றாலே கூட்டம் அலைமோதும். நள்ளிரவு வரை குடும்பத்தோடு கடல் காற்றை வாங்கி கொண்டு ஜாலியாக பொழுதை பலர் கழித்து வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் 8 மணி தாண்டினாலே சீக்கிரம் வீடுகளுக்கு கிளம்பி விடுகிறார்கள். கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயந்து இப்படி செல்கிறார்கள் என்று நினைப்பது முற்றிலும் தவறு. விடுமுறை நாட்களில் நள்ளிரவு நேரத்தில் நடக்கும் பைக் ரேஸை கண்டு பயந்துதான். கடற்கரையில் இருந்து வீட்டிற்கு சீக்கிரம் கிளம்பாமல் இருந்தால் அவ்வளவு தான் பைக் ரேஸ் ஆசாமிகளிடம் சிக்கிவிட வேண்டியது தான்.
சென்னையில் ‘பைக் ரேஸ்’ என்ற கலாசாரம் வைரஸ் போல பரவிவிட்டது. மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, அண்ணா சாலை, 100 அடி ரோடு, சென்னை & பெங்களூர் நெடுஞ்சாலை உள்பட சென்னையில் முக்கிய பெரிய சாலைகளில் பைக் ரேஸ் விடுமுறை நாட்கள் இரவு நேரங்களில் நடக்கிறது. ‘பைக் ரேஸ்’ சென்னையில் 4 விதங்களில் நடக்கிறது.
அதில், முதலில் ‘15 வயது பசங்க’ பைக் ரேஸ். இவர்கள் பைக்கை ஓட்டி பழகியவுடன் யாரையாவது முந்தி செல்வது என்ற ஆசை தோன்றி விடுகிறது. சென்னையில் இவர்கள் பலர் பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளிலோ, அல்லது பீச்சில் சர்வீஸ் ரோட்டிலோ வீடுகளில் ஏதாவது காரணங்களை சொல்லி பைக் எடுத்து வந்து சக நண்பர்களுடன் சிறிய அளவிலான ரேஸில் ஈடுபடுகின்றனர். சென்னையில் ஏதாவது தெருக்களில் இது போன்ற காட்சிகளை காண முடிகிறது. இந்த சிறிய ரேஸில் ஜெயிப்பவர்கள் தான் ஏரியாவுக்கு ‘மாஸ்டர் ஹூரோ’வாம். இங்கு இருந்து தான் பிறக்கிறது பைக் ரேஸ்.
அடுத்தது பணத்திற்காக நடக்கும் பைக் ரேஸ். இதில் கல்லூரி மாணவர்கள் உள்பட பல தரப்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள். இதில் பணம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. விடுமுறை நாட்களில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் உள்பட பல முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் நடக்கிறது. சில கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரையை ரேஸின் பெவிலியனாக வைத்து உள்ளனர். நள்ளிரவு நேரங்களில் இங்கு வரும் பைக் ரேஸ் பார்ட்டிகள் 3 குரூப்களாக பிரிந்து கொள்கிறார்கள். பந்தய தொகையை பற்றி முடிவு செய்து விட்டு ஒரு குரூப் காந்தி சிலையில் இருந்து ராயபுரம் வரைக்கும், மற்றொரு குரூப் பெசன்ட் நகர் வரைக்கும், 3 வது குரூப் திருவான்மியூர் வரைக்கும் ரேஸில் ஈடுபடுகிறார்கள்.
இதில் கட்டப்படும் பந்தய தொகை ரூ 5 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் வரை. பணத்திற்காக நடத்தும் இந்த ரேஸ் தான் சென்னையில் பலரது உயிரை பறித்து உள்ளது. முன்பு எல்லாம் இரவு நேரங்களில் நடத்தி வந்த பைக் ரேஸ் தற்போது பகல் நேரங்களில் அதிகம் நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் ரேஸை கண்டு நடந்து செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும்.
மூன்றாவதாக சில மெக்கானிக்குகளால் நடத்தப்படும் பைக் ரேஸ். இவர்கள் நடத்தும் பைக் ரேஸ் மிகவும் ஆபத்தானவை. சில மெக்கானிக்குகள் தங்கள் பைக்குகளை ரேஸில் ஈடுபடுத்துவதற்காக அதன் என்ஜினில் உள்ள சில பகுதிகளை மாற்றி விடுகிறார்கள். அதன் வேகத் திறனை அதிகரிப்பதற்காக புதுசா சிலவகை ஸ்பேர்பார்ட்டுகளை அதில் இணைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு விடுமுறை நாட்கள் என்றாலே குஷியாகி விடுவார்கள். அன்று இரவோ அல்லது அதிகாலையிலோ ரேஸூக்காக தயாரான பைக்குகளை கொண்டு வந்து சாகச ரேஸை நடத்துவார்கள். இவர்கள் ரேஸூக்காக அதிகம் பயன்படுத்துவது கிழக்கு கடற்கரை சாலையை தான். பந்தய தொகையை வசூலிப்பதற்காக ஒரு நடுவரை நியமித்து அவருக்கு சம்பளத் தொகையையும் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் பந்தயத் தொகை கட்டுவதில் வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது. அதாவது ரேஸ் முடிந்த பிறகு சிலர் பணத்தை கொடுக்காமல் தகராறு செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்ததால் பணத்தை கொடுப்பதற்கு முன்பு ஒரு உறுதிமொழி பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். அதன்பிறகு தான் ரேஸில் பங்கேற்க முடியும். மேலும் சில நேரங்களில் பந்தயத் தொகைக்கு பதில் பைக்கையே வைத்து ரேஸ் நடத்துகிறார்கள்.
நான்காவதாக, வசதி படைத்தவர்கள் நடத்தும் பைக் ரேஸ். இவர்கள் நகருக்குள் வரமாட்டார்கள். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ரேஸை நடத்துகிறார்கள். பந்தயத் தொகையெல்லாம் இல்லாமல் ஒரு ஜாலிக்காக வெகு தொலைவில் வேகமாக சென்று வருவது இவர்களுக்கு ஒரு ஹாபியாக வைத்திருக்கின்றனர். ரேஸில் ஈடுபட பயன்படுத்தும் பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ 8 லட்சம் இருக்கும். இது போன்ற ரேஸ்களும் சென்னையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இவ்வளவு வகைகள் கொண்ட பைக் ரேஸை சென்னையில் வாரந்தோறுமோ, தினந்தோறுமோ அரங்கேறி கொண்டு இருக்கிறது. இதை தடுக்க சென்னை போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் குறிப்பிடத்தக்க வகையில் சொல்லும்படியாக இல்லை. சமீபத்தில் நடந்த பைக் ரேஸ் கானாத்தூரில் 55 வயது முதியவர் உயிரை பறித்துவிட்டது. ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல, சாந்தோம் சர்ச் ரோட்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் முன்னாள் குடும்பத்துடன் சென்றவர் மீது மோதினார். இதில் தந்தைக்கும், 4 வயது குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டது. மேலும் நடந்து சென்ற 5 பேர் மீது மோதியுள்ளார். சென்னையில் மாதத்திற்கு இது போன்ற சம்பவங்கள் ஒன்று அல்லது 2 நடந்து கொண்டு தான் இருக்கிறது.
துணை கமிஷனர் சிவக்குமார்
போக்குவரத்து போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், "பைக் ரேஸ் ஒரு மைதானத்திற்குள் நடத்தினால் அது விளையாட்டு. பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் நடத்தினால் அது விபரீதம்." கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இதை உணராமல் ஜாலிக்காகவும், பணத்திற்காகவும் ரேஸில் ஈடுபட்டு உயிரை பணயம் வைக்கிறார்கள். இதை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீச்சில் எந்த சாலைகளில் எல்லாம் நடக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த சாலைகளில் மப்டியில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக நேரத்தை மப்டி போலீசார் பைக் ரேஸ் ஆசாமிகளை பிடிப்பதற்காக செலவு செய்கிறார்கள். மேலும் கடற்கரை சாலைகளில் 2 உதவி கமிஷனர் தலைமையில் 10 போலீசார் இரவில் இருந்து அதிகாலை வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புத்தாண்டு நெருங்குவதையொட்டி, பைக் ரேஸ்கள் தீவிரமாகலாம் என்று தகவல் வருகிறது. அதனால் கூடுதல் கவனம் செல்லுத்தி பைக் ரேஸ் ஆசாமிகளை பிடிக்கும் வகைகளில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்� என்றார்.
‘வாக்கிங் செல்லவே பயமாக இருக்கிறது’
பீச் ரோட்டில் அதிகாலை நேரங்களில் வாக்கிங் செல்பவர்கள் கூறுகையில், �முன்பெல்லாம் வாக்கிங் செல்வதற்கு ஆர்வமாக இருக்கும். ஆனால், தற்போது அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்லவே பயமாக உள்ளது. ஏனென்றால் காலையில் நடக்கும் பைக் ரேஸ்ஸால் தான். பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு உயிர் மீது பயமில்லை. ஆனால் எங்களுக்கு பயம் இருக்கிறது. பைக் ரேஸை முற்றிலும் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்� என்றனர்.
கடும் தண்டனை இல்லை
பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குழுவாக செல்வார்கள். ஆனால் சில ஆசாமிகள் பீச் ரோட்டில் உள்ள சிக்னல்களில் நிற்கும் இளைஞர்களிடம் சில "சிக்னல்களை" காட்டி ரேசுக்கு அழைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. "ஊர்... ஊர்..." பைக்கில் சத்தம் வரவழைத்து "ரேசுக்கு தயாரா?" என சிக்னல் காட்டி அழைப்பதாக போலீசார் தெரிவித்தனர். பைக் ரேஸில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்தி மரணம் நிகழ்ந்தால் போலீசார் ரேஸ் ஆசாமிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 279, 184, 304(ஏ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பிரிவுகளின் கீழ் கைது செய்யப் படும் பைக் ரேஸ் ஆசாமிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை, அல்லது
ரூ 1000 அபராதம் கட்ட வேண்டும். ரோட்டில் நடந்து செல்பவர்களை பைக் ரேஸ் ஆசாமிகள் மோதி ஏற்படும் உயிரிழப்புக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தான் அபராதம். ஒரு உயிரின் மதிப்பு வெறும் ஆயிரம் ரூபாய் தானா என்று பொது மக்கள் ஆதங்கப்படுகின்றனர். (Dinakaran)
No comments:
Post a Comment