Monday 19 December 2011

பிரதமரை கண்டித்து 10 கி.மீ. நடைபயணம் : கூடங்குளம்

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை 10 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.
ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளத்தில் அணுமின்நிலையத்தை மத்திய அரசு நிறுவியது. இதை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அணுமின்உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவித்ததையடுத்து மீண்டும் போராட்டம் வெடித்தது.
சுமார் 4 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மக்களின் அச்ச உணர்வை போக்காத வரையில் அணுமின்உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தீர்மானத்தை மீறி அணுமின்உற்பத்தி ஆயத்த பணிகளில் அணுமின்நிர்வாகம் ஈடுபட்டதாக அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், இரு வாரங்களில் முதல் இரு அணுஉலைகளும் 6 மாதங்களில் மேலும் இரு அணுஉலைகளும் உற்பத்தியை தொடங்கும் என பேட்டியளித்தார்.
இதனால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இடிந்தகரை லூர்துமாதா ஆலயம் முன்பு 20க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதம் பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை, செட்டிவிளை, நெல்லை மாவட்டம் உவரி, இடிந்தகரை, கூடுதாழை, கூட்டப்பனை, பெருமணல், செட்டிகுளம், கூடங்குளம், வைராவிகிணறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இடிந்தகரை & கூடங்குளம் விலக்கில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் முன்பு கூடினர்.
அங்கு அவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் போராட்டக்குழுவினர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தில் குழந்தைகளும், முதியவர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இளைஞர்கள், பெண்கள், "அணுஉலை உயிருக்கு உலை" என்ற வாசகங்கள் அடங்கிய கறுப்பு டீ ஷர்ட்டுகள் அணிந்திருந்தனர். கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியிருந்தனர். கூடங்குளம் அணுஉலையை உடனே மூடு என்று கோஷமிட்டவாறு நடந்தனர்.

1 comment:

  1. கொஞ்சம் எனது பதிவுகளை பாருங்கள்

    ReplyDelete