போலீஸ் நிலையம் முன் அதிரடிப்படை குவிப்பு
கருங்கல் அருகே ஜாண் ஜேக்கப் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜாண் ஜேக்கப் நேற்று (18-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் பூட்டேற்றி கல்லடை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை பார்க்க சென்றார்.
அப்போது ஒரு கும்பல் ஜாண்ஜேக்கப் எம்எல்ஏவை நடுரோட்டில் வழிமறித்து தாக்கியது. பொதுமக்கள் எம்எல்ஏவை மீட்டு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பூட்டேற்றி கல்லடை பகுதியை சேர்ந்த விஜிகுமார், சிவகுமார், கண்ணன் உள்பட 10 பேர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எம்எல்ஏ ஆதரவாளர்கள் திருப்பி தாக்கியது தொடர்பான புகாரின் பேரில் சரல்விளையை சேர்ந்த குமார், ராஜேஷ் குமார், ஸ்டீபன், சேகர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். காங்கிரசை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதும் எம்.எல்.ஏ.க்கள் ஜாண் ஜேக்கப், பிரின்ஸ் தலைமையில் ஏராளமான காங்கிரசார் கருங்கல் காவல் நிலையத்துக்கு வந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தக்கலை டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையில் அதிரடிப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். கைதான ஜாண் ஜேக்கப் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் நால்வரும் நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே இன்று காலையில் விஜுகுமார், சுகுமார், கண்ணன் உள்பட 7 பேரை கைது செய்ய வலியுறுத்தி மீண்டும் கருங்கல் போலீஸ் நிலையத்தில் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப் தலைமையில் காங்கிரசார் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். தக்கலை டிஎஸ்பி சுந்தர்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி 7 பேரையும் கைது செய்யப்போவதாக தெரிவித்தார். அதன்பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இளைஞர்காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், பாராளுமன்ற தலைவர் குமார், ஜேக்கப்சதா, ரமேஷ்குமார், பினுலால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவங்களால் கருங்கல் காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
No comments:
Post a Comment