Friday, 20 January 2012

ரூ 250 கோடி செலவில் தாம்பரத்தில் 3வது ரயில் முனையம்

எழும்பூர் ரயில் முனையம் மாற்றம் இல்லை
வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களை நிறுத்த சென்னையில் 3-வது ரயில் முனையம் தாம்பரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் தெரிவித்தார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன், சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்தார். நேற்று காலை 9 மணி முதல் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். பின்னர், சிறப்பு ஆய்வு ரயில் மூலம் பாம்பன் பாலம், மண்டபம் ரயில் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே திருமண மண்டபம், அதிகாரிகளுக்கான ஓய்வறை கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அங்கிருந்து ராமநாதபுரம் வரும் வழியில் வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே, இயற்கை எரிவாயு கழகத்திலிருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு அகல ரயில் பாதைக்கு கீழ் எரிவாயு குழாய்கள் செல்கிறது. அவற்றையும் ஆய்வு செய்தார். பின்னர் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்கள், பயணிகளுக்கான வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். இதனையடுத்து பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் சார்பில் ரயில் வசதிகள் குறித்த கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர், நிருபர்களிடம் தீபக் கிரிஷன் கூறியதாவது:
மானாமதுரை & ராமேஸ்வரம் இடையே பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன, பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு பணிகளை செய்தேன். ஆய்வின்போது வர்த்தக சங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்பினர் புதிய ரயில்கள், கூடுதல் ரயில் உட்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் தட்டுப்பாடு உள்ளதால் தற்போதைக்கு புதிய ரயில்கள் இயக்குவதற்கு வாய்ப்பில்லை. இந்தியாவில் சென்னை பெரம்பூர், பஞ்சாப் ஜகுர்தலா ஆகிய 2 இடங்களில் மட்டுமே ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரலியில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ரயில் பெட்டி தொழிற்சாலைக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு ரயில் பெட்டிகள் உற்பத்தி தொடங்கியவுடன் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.
வட இந்தியாவில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களுக்கு அடுத்து மூன்றாவதாக ஒரு ரயில் முனையம் அமைக்கும் திட்டம் உள்ளது. அதற்காக தாம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் முனையம் வந்தால் எழும்பூர் ரயில் முனையத்தை மாற்றவோ, எழும்பூர் வரும் ரயில்களை நிறுத்தம் செய்யும் திட்டமோ இல்லை.
சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்க 400 ஏக்கர் நிலம் தேவைப்படும். அந்த வசதி தாம்பரத்தில் உள்ளது. அங்கும் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தாம்பரத்தில் ரயில் முனையம் அமைக்க ரூ 250 கோடி செலவாகும்.
பாம்பன் ரயில் பாலத்தின் 100வது ஆண்டு விழா அடுத்தாண்டு (2013ல்) சிறப்பாக கொண்டாடப்படும். அந்த பாலத்தை உலக பாரம்பரியமாக அறிவிக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
மானாமதுரை & விருதுநகர் அகல ரயில்பாதை பணி இன்னும் 4 மாதங்களிலும் முடிக்கப்படும். சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் பயணிகளுக்கும், யாத்ரீகர்களுக்கும் வசதியாக இல்லை என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு ரயிலின் நேரம் மாற்றியமைக்க ப்படும். இவ்வாறு தீபக் கிரிஷன் கூறினார்.

No comments:

Post a Comment