Friday 20 January 2012

வேகத்தடை மூலம் மின்சாரம் : கொடுப்பைக்குழி மாணவன்


குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் +1 வகுப்பு படித்து வருபவர் விக்னேஷ் (16). இவர் தக்கலையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ஆற்றல் உற்பத்தி செய்யும் வேகத்தடை என்ற நூதன இயந்திரத்தை தயாரித்து வைத்து இருந்தார். இதற்காக அவருக்கு முதல் பரிசு கிடைத்தது.
தொடர்ந்து திருச்சியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இவருக்கு தங்க பதக்கமும் கிடைத்தது.
இது குறித்து மாணவன் விக்னேஷ் கூறியது: எனது தந்தை சந்திரசேகரன் லோடு ஆட்டோ டிரைவர். சிறு வயதில் இருந்தே ஏதேனும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனடிப்படையில் தற்போது சாலை வேகத்தடையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் படைப்பாற்றலை கண்டுபிடித்துள்ளேன்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப இதனை பயன்படுத்தி எளிதில் மின்சாரம் தயாரிக்கலாம். இந்த இயந்திரம் மூலம் சாலை ஒரங்களில் தெருவிளக்குகள், சிக்னல் விளக்குகளை எரிய வைக்கலாம். இந்த வேகத்தடை மூலம் தேவைக்கு ஏற்ப மின்சாரம் தயாரிக்கலாம்.
சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் கீழ்பகுதியில் முதலில் பிஸ்டன் ஒன்று பொருத்தப்படும். இந்த பிஸ்டனின் கீழ் பகுதியில் சுருள்வில் அமைக்கப்பட்டு அதை சட்டத்துடன் பொருத்த வேண்டும். பின்னர் சட்டத்தின் ஒரு பகுதியில் டைனமிக் மோட்டார் ஒன்று இயங்கும் வகையில் பொருத்தப்பட வேண்டும். இம்மோட்டாரை இயக்க இயங்கும் திருகு பற்கள் அமைக்கப்பட வேண்டும். இப்போது இந்த வேகத்தடை மீது வாகனங்கள் ஏறி இறங்கும் போது மின் ஆற்றல் உற்பத்தி செய்யப் படும்.
இந்த இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதன்மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். அதனை சேமிக்கவும் செய்யலாம் என்றார்.
வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிக்க டைனமிக் மோட்டார், நகரும்லென்ஸ், பிஸ்டன் சுருள்வில், இயங்கும் திருகுபற்கள், வேகத்தடை அமைப்பு போன்றவை தேவைபடுகிறது.
மாநில அளவில் அறிவியல் கண்காட்சியில் சாதனை படைத்த மாணவன் விக்னேஷை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், பள்ளித் தலைமை ஆசிரியர் சோபித ராயப்பா, உதவி தலைமை ஆசிரியர் குற்றாலம் பிள்ளை, இயற்பியல் துறை ஆசிரியர் குணசீலன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சந்திரசேகர், ஆலோசகர் சகாயதாஸ் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.  (Dinakaran)

1 comment: