Friday, 20 January 2012

5 மாநில தேர்தலில் அன்னா குழு பிரசாரம்

சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்ய அன்னா குழு முடிவு செய்துள்ளது. ஹரித்துவாரில் நாளை பிரசாரம் தொடங்குகிறது.
பலமான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாததை கண்டித்து மும்பையில் அன்னா ஹசாரே தொடங்கிய உண்ணாவிரதத்துக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இல்லை. உடல்நிலை சரியில்லாததால் உண்ணாவிரதத்தை பாதியில் நிறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம் என அன்னா குழு அறிவித்தது.
இந்நிலையில், இந்த முடிவை அன்னா குழு நேற்று திடீரென கைவிட்டது. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும் என அன்னா குழு அறிவித்தது. ஹரித்துவாரில் நாளை பிரசாரம் தொடங்கப்படுகிறது. அன்னா குழு உறுப்பினர்கள் கேஜ்ரிவால், கிரண்பேடி உட்பட பலர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து அன்னா குழு உறுப்பினர் மணீஷ் சிசோடியா கூறுகையில், “தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் அன்னா குழு பிரசாரம் செய்யும். நாங்கள் எந்த கட்சிக்கும் எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம். வாக்காளர்களிடம் ஊழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நேர்மையானவர்களை தேர்ந்ததெடுக்கும்படி கூறுவோம். வாக்காளர்களை வழி நடத்த இதுதான் சரியான நேரம்” என்றார்.
காங்கிரஸ் எதிர்ப்பு
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுரேந்திர குமார் கூறுகையில், “தேர்தலில் பாஜ பலன் அடைவதற்காக அன்னா குழு பிரசாரம் செய்கிறது” என்று குற்றம்சாட்டினார். “ஜனநாயக நாட்டில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க எல்லாருக்கும் உரிமை உள்ளது. எனவே, அன்னா குழு பிரசாரத்தை வரவேற்கிறோம்” என பாஜ கூறியுள்ளது.

No comments:

Post a Comment