Friday 20 January 2012

வழக்கு விசாரணைக்கு முன்பே தேர்வு கட்டண இறுதி தேதி அறிவிப்பு

குழப்பத்தில் பல்மருத்துவ மாணவர்கள்
பல்மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு முறையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சமீபத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்தது. அதன்படி, ஒவ்வொரு பாடத்திலும், எழுத்து தேர்வுக்கு 100 மதிப்பெண், வாய்மொழி தேர்வுக்கு 100 மதிப்பெண், இன்டர்னல் தேர்வுக்கு 100 மதிப்பெண் என்றும் தனியாக செய்முறைக்கு 100 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று அறிவித்தது. இந்த தேர்வு முறையால் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்தனர்.
இதனையடுத்து, மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து பல் மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழகம் உறுதியளித்தது. இந்நிலையில், டிசம்பர் மாதம் 24-ம் தேதி 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், 100 மதிப்பெண்ணுக்கு எழுதிய எழுத்து தேர்வை 70-க்கு குறைத்தும், வாய்மொழி தேர்வை 20-க்கு குறைத்தும், இன்டர்னல் தேர்வை 10 மதிப்பெண்ணுக்கு குறைத்தும் என மூன்றையும் 100-க்கு கணக்கிட்டு அதில் 50 சதவீதம் பெற்றால் தேர்வில் வெற்றி என முடிவை வெளியிட்டது பல்கலைக்கழகம். இதில், வழக்கு தொடர்ந்த மாணவர்களில் பாதி பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர். மற்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், டிசம்பர் 26-ம் தேதி முதலாண்டு மாணவர்களின் தேர்வு முடிவு வெளியடப்பட்டது. இதிலும் மேற்கண்ட அனைத்து குளறுபடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன.
இதனை தொடர்ந்து, மதிப்பெண்ணை குறைத்து கணக்கிடாமல், பழைய முறைப்படியே கணக்கிட்டு, தேர்வு முடிவை மீண்டும் மாற்றி வெளியிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் மாணவர்கள் டிசம்பர் 28-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 11-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர், ஜனவரி 18-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த மாதம் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே, பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் கடைசி தேதி கடந்த 12ம் தேதியுடன் முடிவடைந்ததாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இந்த தன்னிச்சையான போக்கால், மருத்துவ மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எந்த முறைப்படி நடத்தப்படும் என்று தெரியாமலும், எந்த முறைப்படி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்ற குழப்பத்தாலும் மாணவர்களின் படிப்பும், வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. மருத்துவ மாணவர்களின் வாழ்க்கையில், எந்தவித கடிவாளமும், கட்டுப்பாடுமின்றி பல்கலைக்கழகம் �கபடி’ விளையாடுகிறது என்பதே வேதனையான உண்மை.
இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறுகையில், “பல் மருத்துவ கவுன்சில் விதிமுறைகளைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். அதன்படிதான் தேர்வு நடத்துகிறோம். கோர்ட்டும் அதையே உத்தரவிட்டுள்ளது. இதை மீற முடியாது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்படுகிறோம். இதை மருத்துவ கவுன்சிலும் ஒப்புக் கொண்டுள்ளது” என்றார்.
25 ஆண்டு வரலாற்றில் புதிய சாதனை!
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 1988ல் ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டு கால வரலாற்றில், 1 எம்பிபிஎஸ் தேர்வுக்கு 3 தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற எம்பிபிஎஸ் தேர்வில் முதலில் வெளியான தேர்வு முடிவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மறு திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவும் சரியில்லை என்று மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், மறு திருத்தம் செய்யப்பட்ட தேர்வு முடிவை மறு ஆய்வு செய்து வெளியிட கோர்ட் உத்தரவிட்டது. இவ்வாறு 3 முறை தேர்வு முறை வெளியிட்டு பல்கலைக்கழகம் புதிய சாதனை படைத்துள்ளது. (Dinakaran)

No comments:

Post a Comment