குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007ன்படி பெற்றோர்களை புறக்கணித்து செல்வது குற்றமாகும். ஒவ்வொரு உட்கோட்டங்கள் அளவில் கோட்டாட்சியரை தலைவராக கொண்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனு 90 நாட்களுக்குள் முடித்து வைக்கப்படும்.
குமரி மாவட்டத்தில் இதுவரை 4 வயது முதிர்ந்த பெண்கள் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் பெற்ற பிள்ளைகளே புறக்கணித்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருளுதவியை கோர தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி உணவு, இருப்பிடம், உடை, மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக பராமரிப்பு தொகை கோரலாம். இச்சட்டத்தின் அம்சங்கள்:
** போதுமான பொருளாதார வசதியில்லாத நிலையிலும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடம் பராமரிப்பு தொகை கோரலாம்.
** பெற்றெடுத்த தாய் தந்தை மட்டுமல்லாது மாற்றாந்தாய், தந்தை, வளர்ப்பு தாய், தந்தை ஆகியோரும் இச்சட்டத்தின்கீழ் பராமரிப்பு தொகை கோரலாம்.
** பிள்ளை இல்லாத மூத்த குடிமக்கள் தங்களது சொத்தை அனுபவித்து கொண்டிருப்பவர் அல்லது தனது காலத்திற்கு பிறகு தனது சொத்தை அடைய இருப்பவர்களிடம் பராமரிப்பு தொகை கோரி மனுதாக்கல் செய்யலாம்.
** தீர்ப்பாய உத்தரவை மதிக்காத பிள்ளைகள் அல்லது உறவினர்கள் மீது பணதண்டம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களை ஆதரவற்ற நிலையில் விட்டு சென்றால் பராமரிக்க தவறியவர்களுக்கு 3 மாதம் சிறைதண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக அளிக்கப்படும். பெற்றோர் ஆதரவற்ற நிலையில் பெற்ற பிள்ளைகள் புறக்கணிப்பது கண்டுபிக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment