கோவையில் வினோத புகார்.. போலீசார் அதிர்ச்சி
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்தளத்தில் உள்ள வீட்டினர் வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கியது என்பதால் மிக பத்திரமாக எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் நாட்டு நாய் ஒன்றை வளர்க்கின்றனர்.
நேற்று கீழ் வீட்டுக்காரர் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். தங்கள் வீட்டு நாயும் மேல் வீட்டு நாட்டு நாயும் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கம்பை எடுத்து நாட்டு நாயை சரமாரியாக அடித்தார். அது அலறும் சத்தம் கேட்டு, மேல் வீட்டில் இருந்த பெண் இறங்கி வந்தார். அவருக்கும் கீழ் வீட்டு உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “நான் வளர்ப்பது ஜாதி நாய். சாதாரணமாக சோறும் குழம்பும் ஊற்றி வளர்க்கவில்லை. மட்டன் போட்டு வளர்க்கிறேன். சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பாட்டி விடுகிறேன். ஊர் மேயும் உன் நாட்டு நாய்க்கு என் ஜாதி நாய் கேட்கிறதா?” என்று கத்தினார்.
அந்த பெண்ணும் விடவில்லை. “நாய்கள் அப்படிதான் இருக்கும். ஜாதி நாய் என்றால் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியதுதானே. வெளியே விட்டது உன் தப்பு. ஊசி இடம் கொடுக்காமல் நூலு நுழையுமா?” என்றார். ஒருமையில் பேசிக்கொண்டதால் மோதல் வலுத்தது. கூட்டம் கூட ஆரம்பித்தது.
இருவரும் நாய்களுடன் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். நாட்டு நாய் மீது கற்பழிப்பு வழக்கு போட வேண்டும் என்று இவர் கூற.. நாட்டு நாயை தாக்கிய கீழ்வீட்டு ஆசாமி மீது தாக்குதல் வழக்கு போட வேண்டும் என்று அந்த பெண் கூற.. ஸ்டேஷனே பரபரப்பானது. இந்த வினோத வழக்கால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சமரச பேச்சு நடத்தியும் பலனில்லை. நாய் பிரச்னையை இதோடு விடப்போவதில்லை என்று புறப்பட்ட இரு தரப்பினரையும் இன்றும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment