Friday, 20 January 2012

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னையை சேர்ந்த வக்கீல் வீரமணி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:
கடந்த திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் எஸ்டேட்டில் ரூ.1092 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் புதிய தலைமைச் செயலகத்தை இழுத்து மூடியது. அந்த இடத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது சட்டவிரோதமானது. மருத்துவமனையாக மாற்றுவதற்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறவில்லை. இதுதொடர்பாக அரசுக்கு நான் கொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசிதரன் கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் டி.முருகேசன் மற்றும் ஜனார்த்தன ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, அரசு பதில் அளிக்க மேலும் அவகாசம் கேட்டார். மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுவரை எந்த அனுமதியும் பெறவில்லை. மருத்துவமனையாக மாற்ற டெண்டர் விட அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி பெற்றுள்ளதா, இல்லையா என்பது குறித்தும் மருத்துவமனை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டதா என்றும் 20&ம் தேதி (இன்று) அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு
அட்வகேட் ஜெனரல்: புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து கடந்த ஆட்சியில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி இருப்பதால் புதிதாக அனுமதி வாங்க தேவையில்லை என அரசு முடிவு எடுத்துள்ளது. மருத்துவமனையாக மாற்ற கட்டிடத்தின் உள்பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என கருதுகிறோம்.
நீதிபதிகள்: எந்த சட்டப்பிரிவில் இப்படி கூறப்பட்டுள்ளது.
அட்வகேட் ஜெனரல்: மருத்துவமனை செயல்பட துவங்குவதற்கு முன்பு அனுமதி வாங்கிவிடுவோம். அதுவரை மற்ற பணிகள் நடக்க கோர்ட் அனுமதிக்க வேண்டும்
நீதிபதிகள்: நீங்கள் டெண்டர் விடுங்கள். அதற்கான தொகையையும் கொடுத்து விடுங்கள். ஆனால், மத்திய அரசு அனுமதி இல்லாமல் கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. அப்படி மாற்றம் செய்தால், எதிர்காலத்தில் மத்திய அரசு அனுமதிக்காத பட்சத்தில் அரசு பணம் வீணாகும் நிலை ஏற்படும். அரசின் நலன் கருதியும், பொதுநலன் கருதியும் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறோம். மத்திய அரசு அனுமதி இல்லாமல் கட்டிடத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது.
வக்கீல் பி.வில்சன்: இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு அரசு கட்டுப்பட வேண்டும்.
அட்வகேட் ஜெனரல்: வரும் 24&ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதற்குள் வானம் இடிந்து விழுந்துவிடாது.
நீதிபதிகள்: நீங்கள் கூறியதையே நாங்கள் கூறுகிறோம். இப்போது இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் வானம் இடிந்து விழுந்துவிடாது.
அட்வகேட் ஜெனரல்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்துகிறேன். அரசு இதில் கொள்கை முடிவு எடுத்துள்ளது.
நீதிபதிகள்: மத்திய அரசிடம் இதுவரை அனுமதி பெறவில்லை என அட்வகேட் ஜெனரல் கூறியதை பதிவு செய்து கொள்கிறோம். வழக்கு விசாரணை பிப்ரவரி 11-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கு முடியும் வரை புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. டெண்டர் விடுவது, மத்திய அரசின் அனுமதி பெற முயற்சிப்பது ஆகியவற்றை அரசின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment